சென்னையில் அமைக்கப்பட்டுள்ள - மழைநீர் வடிகால்களின் வரைபடம் வெளியீடு : மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள -  மழைநீர் வடிகால்களின்  வரைபடம் வெளியீடு :  மாநகராட்சி நடவடிக்கை
Updated on
1 min read

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களின் வரைபடத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை 2,070 கிமீ நீளமுள்ள 9,224 மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பலநூறு கோடி ரூபாய்களை செலவிட்டு வடிகால்கள் அமைக்கப்பட்ட பின்னரும் கடந்த வாரம் பெய்த அதிகனமழையின்போது சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அதனால் சென்னையில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னையில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டது தொடர்பாக, வார்டு வாரியான வரைபடத்தை மாநகராட்சி நிர்வாகம் அதன் https://chennaicorporation.gov.in/gcc/swd_net_maps/ என்ற இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.

தற்போது 3 முதல் 13 வரையிலான மண்டலங்களில் இடம்பெற்றுள்ள வார்டுகளின் வரைபடங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. 1, 2, 14, 15 ஆகிய மண்டலங்களில் இடம்பெற்றுள்ள வார்டுகளின் வரைபடங்கள் வெளியிடப்படவில்லை. இது விரைவில் வெளியிடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சி இணையதளத்துக்கு சென்று தங்கள் பகுதியில் இடம்பெற்றுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வரைபடத்தில் உள்ள விவரங்கள் ஆகியவற்றை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஒப்பிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சியின் இந்த வெளிப்படைத் தன்மையான முன்னெடுப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சிலர், வரைபடத்தில் உள்ளது போன்று தங்கள் பகுதியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

இப்புகார்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மழைநீர் வடிகாலை கட்டாமல், கட்டி முடித்துவிட்டதாக வரைபடத்தில் குறிப்பிட்டு இருப்பது தெரியவந்தால், தொடர்புடைய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in