தமிழகத்துக்கென தனியாக பயிர்க் காப்பீட்டு திட்டம் : தமிழக அரசுக்கு காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்துக்கென தனியாக பயிர்க் காப்பீட்டு திட்டம் :  தமிழக அரசுக்கு காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழகத்துக்கென தனியாக பயிர்க் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். இதில், கவுரவத் தலைவர் நீலன் அசோகன், திருவாரூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்பையன், செயலாளர் குடவாசல் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், வேளாண் சட்டங்கள் ரத்து குறித்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளதை ஏற்று, தமிழக காவிரி விவசாயிகள் சங்கமும் போராட்டத்தில் ஈடுபடும். மேலும், மத்திய அரசு அறிவித்துள்ளபடி குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய விரைந்து குழு அமைக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு மற்றும் சம்பா, தாளடி பயிர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.25,000 இடுபொருள் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழகத்துக்கென தனி பயிர்க் காப்பீடு திட்டத்தை வேளாண்மைத் துறை மூலம் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குரிய பிரீமியத் தொகைக்கான பங்கை மத்திய அரசு மூலம் கேட்டுப் பெற முயற்சிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in