

மத்திய அரசுக்கு எதிராக நாளை முதல் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பாஜக ஆட்சி மத்தியில் அமைந்து கடந்த 7 ஆண்டுகளாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியது.
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 கோடிபேர் பட்டினியால் வாடுகின்றனர். கடந்த 45 வருடங்களில் இல்லாதஅளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
எனவே, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மக்களுக்கு உணர்த்தும் வகையில் நவ. 22முதல் 29-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியினர் கதர் குல்லா அணிந்து, கையில் மூவர்ணக் கொடி, கண்டனப் பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்க வேண்டும்.
மத்திய அரசின் அவலங்களை பட்டியலிட்டு தயாரிக்கப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தை மக்களிடம் விநியோகிக்க வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள்,எம்.பி., எம்எல்ஏக்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.