தடை விலக்கி கொள்ளப்பட்டதால் - கடந்த 20 மாதங்களுக்கு பிறகு தி.மலையில் பக்தர்கள் கிரிவலம் :

திருவண்ணாமலையில் கடந்த 20 மாதங்களுக்கு பிறகு  நேற்று கிரிவலம் சென்ற பக்தர்கள். படம்: இரா.தினேஷ்குமார்.
திருவண்ணாமலையில் கடந்த 20 மாதங்களுக்கு பிறகு நேற்று கிரிவலம் சென்ற பக்தர்கள். படம்: இரா.தினேஷ்குமார்.
Updated on
1 min read

தமிழக அரசின் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால், தி.மலையில் 20 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் என்பது உலகப் பிரசித்தி பெற்றது. லட்சக் கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., தொலைவு உள்ள கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசிக்கின்றனர். இந்நிலையில், கரோனா தொற்று பரவல் எதிரொலியாக ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டதால், 2020-ம் ஆண்டு முதல் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப் பட்ட நிலையிலும், பவுர்ணமி கிரிவலத்துக்கான தடையை நீக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வில்லை. இருப்பினும் தடையை மீறி, இந்தாண்டு தொடக்கத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு 2-வது ஆண்டாக, இந்தாண்டும் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2 நாட்களுக்கு தலா 20 ஆயிரம் பக்தர்கள், கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

இதையடுத்து, 20 மாதங் களுக்கு பிறகு, பவுர்ணமி நாளான நேற்று இரவு முதல், பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

இதற்கிடையில், நவம்பர் 19 மற்றும் 20-ம் தேதி கிரிவலம் செல்வதற்கு www.arunachaleswarartemple.tnnrce.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மக்களை சென்றடை வதற்கு முன்பாக கிரிவலம் செல்லும் பக்தர்களின் வருகை நேற்று காலை அதிகரித்தது.

அவர்களை நகரம் மற்றும் கிரிவலம் செல்லும் பாதையில் தடுத்து நிறுத்தி, இணையதள முன் பதிவு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது பக்தர்கள், முன் பதிவு அறிவிப்பு என்பது தங்களுக்கு தெரியாது என எடுத்துரைத்து, தங்களை அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர், அவர்களை பகுதி பகுதியாக பிரித்து கிரிவலம் செல்ல காவல் துறையினர் அனுமதித்தனர். மழை இல்லாததால், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

அப்போது அவர்கள், ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரத்தை உச்சரித்தப்படி, அண்ணா மலையாரை வழிபட்டனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, தடையின்றி கிரிவலம் சென்று, பரம்பொருளை வழிபட்டது மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத் துள்ளது” என பக்தர்கள் தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in