அரசு, பொதுத்துறை பணியிடங்களுக்கான - விளையாட்டு இடஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்க்கப்பட்டதாக அரசாணை : அமைச்சர் மெய்யநாதன் தகவல்

அரசு, பொதுத்துறை பணியிடங்களுக்கான  -  விளையாட்டு இடஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்க்கப்பட்டதாக அரசாணை  :  அமைச்சர் மெய்யநாதன் தகவல்
Updated on
1 min read

தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3சதவீத இடஒதுக்கீட்டில் சிலம்பம்விளையாட்டை சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதன்படி சி.ஏ.பவானிதேவி (வாள்சண்டை), எ.தருண் (தடகளம்), லட்சுமண் ரோகித் மரடாப்பா (படகோட்டுதல்), தனலட்சுமி (தடகளம்), வி.சுபா (தடகளம்) மற்றும் டி.மாரியப்பன் ஆகியோருக்கு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ்,கபடி மற்றும் ஊசூ ஆகிய விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பத்தை 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், முதல்வரின் சீரிய முயற்சியால், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது.. இதன்மூலம் சிலம்பம்வீரர்கள், வீராங்கனைகள் பெருமளவில் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in