

தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றலாப் பயணிகள் இன்று செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை பெய்தது.
இதனால் வாழைகிரி அருகே ராட்சத மரம் ஒன்று முறிந்து மலைச் சாலையில் விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. வனத் துறை, நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை அகற்றினர். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
நேற்று பகலில் மிதமான மழை தொடர்ந்து பெய்தது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் உள்ள குணா குகை, மோயர் பாய்ண்ட், தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் இன்று ஒரு நாள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.