

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் இருஅமர்வுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பக் கோரியும், 3-வதுஅமர்வை அமைக்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த வெங்கடசிவக்குமார், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது இந்தகாலியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், 3-வது அமர்வு அமைப்பது குடியரசுத் தலைவரின் தனி அதிகாரத்துக்கு உட்பட்டது எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைப்பதிவு செய்து கொண்டநீதிபதிகள், ‘‘தேசிய கம்பெனி சட்டதீர்ப்பாயத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், இதன்சென்னை அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவ.23-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.