

வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், தொல்பொருள் தளங்களை குவாரிப் பணிகளில் இருந்து பாதுகாப்பது குறித்து, அதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கையின்போது, ‘‘குவாரிப் பணிகளில் இருந்து வரலாற்றுச்சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுகை மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும்" என்று துறை அமைச்சர் அறிவித்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர், தமிழ்நாடு சிறு கனிமங்கள் விதிகளில் திருத்தம் செய்ய அரசுக்குப் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, அந்த விதிகளில் திருத்தம் செய்தும், கூடுதல் விதிகளை சேர்த்தும்அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தொல்பெருள் பகுதி எனக் கண்டறியப்பட்ட இடங்களைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்கு எந்த குவாரிப் பணிக்கும் உரிமம் வழங்கக் கூடாது. மேலும்,சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் சரணாலயங்கள், யானைகள் வழித்தடங்கள் மற்றும் காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் குவாரி அல்லது சுரங்கம், கல் அரைக்கும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.