

ஏலகிரி அடுத்த அத்தனாவூரில் ரூ.1.35 கோடி மதிப்பில் கட்டப் பட்ட பழங்குடியினர் நல மாணவியர் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைக்கு உட்பட்ட அத்தனாவூரில் 617.70 சதுர மீட்டர் பரப்பில் ரூ.1.35 கோடி மதிப்பில் அரசு பழங்குடியினர் நல மாணவியர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு, 50 பள்ளி மாணவிகள் வசதியாக தங்க விசாலமான 6 அறைகள், மின்வசதி, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நவீன வசதியுடன் கூடிய குளியல் அறை, கழிப்பறை, சூரிய மின்னொளி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதை மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.