வீடு இடிந்து பெயின்டர் உயிரிழப்பு :
திருப்பத்தூரில் தொடர் மழையால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெயின்டர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் அருகே மட்றப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெயின்டர் ராமன்(42), என்பவர் தனது கூறை வீட்டில் உறங்கிகொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மனைவி சரஸ்வதி(42), மகள்கள் நிவேதா(12), சொப்னா(6), மகன் நிஷாந்த்(8).ஆகியோர் அருகில் உள்ள சரஸ்வதியின் தாய் வீட்டில் தங்கியதால் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் அங்கு சென்று இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ராமன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
