அரசு வேலை என மோசடி: : பழனிசாமி உதவியாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி :

அரசு வேலை என மோசடி: : பழனிசாமி உதவியாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி :
Updated on
1 min read

அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட புகாரில், முன்னாள்முதல்வர் பழனிசாமி உதவியாளரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேஉள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார்.

அப்போது பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சத்தைபுரோக்கர் செல்வகுமார் மூலமாக பெற்றுமணி தன்னை ஏமாற்றி விட்டதாக சேலம்போலீஸாரிடம் நெய்வேலியை சேர்ந்ததமிழ்ச்செல்வன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் சேலம் போலீஸார், மணிமீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணி மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸார் தரப்பில் கூடுதல்அரசு குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜரானார். ‘‘வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளமணி மீது மேலும் பல புகார்கள் வரக்கூடும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன்அளிக்கக் கூடாது’’ என்று அவர் தனது வாதத்தின்போது தெரிவித்தார்.

இதையடுத்து, மணியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in