

சென்னையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிபவர் சாம் வின்சென்ட். சைதாப்பேட்டை யில் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராகப் பணிபுரிபவர் சரவணன்.
இருவரும் 2018-ல் விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளர்களாக பணியாற்றினர்.
அப்போது இடைத்தரகர்கள் பூங்கா வெங்கடேசன், டெய்லர் ரவி உள்ளிட்டோரிடம் இருவரும் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தியதில், புகாரில் உண்மைத் தன்மை இருந்ததால், இரு ஆய்வாளர்கள் மீதும் வழக்கு் பதிவு செய்தனர். தொடர்ந்து இருவர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.
மேலும், அவர்கள் பணியாற்றும் காவல் நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வாளர் சாம் வின்சன்ட் வீட்டில் 17 சொத்து ஆவணங்களும், சரவணன் வீட்டில் 8 சொத்து ஆவணங்கள், ரூ 18.50 லட்சம் வைப்புத்தொகை, ரூ.2.50 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.