

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் வெளிப்படையாக தேர்வு செய்யப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திருவள்ளூர் தொகுதியில் உள்ள 3,014 வாக்குச்சாவடிகளில் 1806 வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யும் பணி ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில், பொது பார்வையாளர் அனந்த ராமு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஆட்சியர் உரையாற்றும் போது கூறியதாவது:
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கிய கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1,806 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,806 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 1,806 கட்டுப்பாட்டுக் கருவிகளும் கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து வேட்பாளருக்கோ, முகவர்களுக்கோ எவ்வித சந்தேகமும் ஏற்படாதவகையில், அவர்கள் முன்னிலையில் வெளிப்படைத் தன்மையுடன் இந்த தேர்வு முறை கையாளப்படுகிறது. மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தேவைக்கேற்ப 5 சதவீத இயந்திரங்கள் கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டு இருப்பு வைக்கப்படும்.
இந்தக் கருவிகள் தேர்தல் பொது பார்வையாளர், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் முன்னிலையில் எண்கள் சரிபார்க்கப் பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வசம் பாதுகாப்புடன் ஒப்படைக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.