

டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், மூடி சீல் வைக்க வேண்டும்என மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், சென்னிமலை வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தோர், தங்களது குழந்தைகள் பள்ளி செல்ல பேருந்து வசதி செய்துதரக்கோரி மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப. முருகேசன் அலுவலர்கள் மத்தியில் பேசியதாவது:
பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு, மக்கள் குறைதீர் முகாம் மற்றும் மாவட்ட அமைச்சர், ஆட்சியரிடம் வழங்கும் மனுக்கள் மீது விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் தனிப்பிரிவில் இருந்து இணையம் மூலம் அனுப்பப்படும் மனுக்களுக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய பதிலை, இணையம் மூலமே அனுப்ப வேண்டும்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க அனைத்துப்பிரிவு அலுவலர்களும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் பார்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டால், மூடி சீல் வைக்க வேண்டும், என்றார்.