

இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இளைஞரை மடக்கி பிடித்த காவலர்களுக்கு எஸ்.பி., வெகுமதி வழங்கி பாராட்டினார்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையில் காவலர்களாக பணியாற்றி வரும் ரஞ்சித்குமார் மற்றும் அருண்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் காவலர்களை கண்டதும் மாற்று வழியில் தப்பிச் செல்ல முயன்றார். உடனே சந்தேகமடைந்த காவலர்கள் அவரை சுமார் 3 கி.மீட்டர் தொலைவு வரை விரட்டிச்சென்று மடக்கிபிடித்தனர்.
பின்னர், காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், விபத்து ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை மடக்கிப் பிடித்த காவலர்கள் ரஞ்சித்குமார் மற்றும் அருண்குமார் ஆகிய இருவருக்கும் திருப்பத்தூர் எஸ்.பி.,டாக்டர். பாலகிருஷ்ணன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.