காஞ்சி நகரில் வறண்டு கிடக்கும் குளங்கள் -  மழைநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் :  நகர மக்கள் கோரிக்கை

காஞ்சி நகரில் வறண்டு கிடக்கும் குளங்கள் - மழைநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் : நகர மக்கள் கோரிக்கை

Published on

காஞ்சிபுரம் நகரில் குளங்களுக்கு மழைநீரை கொண்டு செல்லும் கால்வாய்கள் முறையாக இல்லாததால், கனமழை பெய்த நிலையிலும் குளங்கள் வறண்டு காணப்படுவதால் கால்வாய் கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மக்களுக்கு வேகவதி, பாலாறு மற்றும் திருபாற்கடல் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறது. எனினும், நகரத்தின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அருகில் உள்ள செவிலிமேடு, நத்தப்பேட்டை, தேனம்பாக்கம் ஊராட்சி பகுதிகள் கடந்த 2011-ம்ஆண்டு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.

இதன்மூலம் திருக்காலிமேடு, தேனம்பாக்கம் கிராமங்களின் நீர்நிலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் மாநகராட்சி நிர்வாகம் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் உள்ள குளங்களை, நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால் குப்பை கொட்டப்பட்டு நீரை சேமிக்க முடியாமல், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையிலும் இந்த குளங்கள் நிரம்பாமல் உள்ளன. அதனால், குளங்களுக்கான கால்வாய்களின் கட்டமைப்புகளை சீரமைத்து குளங்களுக்கு மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரப்பகுதி மக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் 53 குளங்கள் உள்ளன. இக்குளங்களின் நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் மழைநீர் கால்வாய்களை அவ்வப்போது சீரமைத்து வருகிறோம். ஒரு சில குளங்களின் கால்வாய் கட்டமைப்புகளை சீரமைப்பது சவாலாக உள்ளது. எனினும், மழைநீர் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in