

வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 50,019 நபர்கள் கரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதில், 48,733 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1,134 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 26 பேர் குணமடைந்து வீடு திரும் பினர். 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒருவருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் விடுதியில் தங்கியுள்ள அந்த நபரும் வெளியூரைச் சேர்ந்தவர் ஆவார்.
வேலூரில் நேற்று மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு கரோனா பாதிப்பு இல்லாத நிலை தற்போது வேலூரில் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தாமாக முன் வந்து கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.
அரசின் வழிகாட்டு நெறி முறைகளை தவறாமல் கடைப் பிடித்தால் மட்டுமே கரோனா பரவலில் இருந்தும், மீண்டும் கரோனா பரவுவதை தடுக்கவும் முடியும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.