

சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள அல்லிக்குட்டையைச் சேர்ந்தவர் ஏழுமலையின் மகன் ராமசாமி (34). இவர் தனது தந்தை, மகன் பாலசபரி (5), சகோதரி காளியம்மாள், சகோதரியின் மகன் மாரியப்பன், மகள் புவனேஸ்வரி ஆகியோருடன் வசித்தார்.
இந்நிலையில் தொடர் மழையால் நேற்று அதிகாலை ராமசாமியின் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஏழுமலை உட்பட 6 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். அக்கம்பக்கத்தினர் சிறுவன் பாலசபரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் உயிர்இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். காயமடைந்த மற்றவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து வீராணம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
குன்னூர் அருகே ஆசிரியை உயிரிழப்பு
குன்னூர் அருகே உள்ள ஓதனட்டி கிராமத்தில் வசித்துவந்தவர் மகேஸ்வரி (50). இவர், வண்டிசோலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியே வந்த மகேஸ்வரி மீது, வீட்டின் அருகே இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், உதகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார். அருவங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.