

கரூரில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் கணபதி (61). தனது வீட்டில் அவ்வப்போது பூஜைகளை நடத்தி வந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு 10, 12, 13 வயதுடைய 3 சிறுமிகளை (சகோதரிகள்) பலமுறை பூஜைக்கு அழைத்து வந்து,பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் தாய் கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில், போக்ஸோ, பெண் வன்கொடுமை உட்பட 4 பிரிவுகளின்கீழ் வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட கணபதிக்கு போக்ஸோ வழக்கின் கீழ் 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் கணபதிக்கு 4 ஆண்டுகள் 3 மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி, இந்த சிறைத் தண்டனையை போக்ஸோ வழக்கின் கீழ் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
மேலும், அபராதத் தொகை 1.60 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.2.5 லட்சத்தை இழப்பீடாக அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.