

தேவிபட்டினம் அருகே தாவுக்காடைச் சேர்ந்த முருகன் மகன் கோகுல்ராஜ் (24). இவரது மனைவி முத்துலெட்சுமி (20). இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது. கோகுல்ராஜின் பெரியப்பா மகன் கோபாலகிருஷ்ணன் (24). இந்நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கும் முத்துலெட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த செப்.19-ல் வெளியூர்சென்றுவிட்டனர். பின்னர் மனைவியை தேடி கண்டுபிடித்து கோகுல்ராஜ் ஊருக்கு அழைத்து வந்துள்ளார். நேற்று பனங்காட்டுப் பகுதியில் கோபாலகிருஷ்ணனை, கோகுல் ராஜூம், அவரது உறவினர் விஜய குமாரும் வழிமறித்தனர். கோபால கிருஷ்ணனை கோகுல்ராஜ் அரிவாளால் வெட்டினார். இதில் அவர் உயிரிழந்தார். தேவிபட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோகுல்ராஜையும், விஜயகுமாரையும் தேடி வருகின்றனர்.