

பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளரின் தாயார் தாக்கல் செய்த போலீஸ் அதிகாரி களுக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.
தேனியைச் சேர்ந்த பவுன்கொடி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது மூத்த மகள் வசந்தி. மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். அவரை பேக் டெய்லர் ஒருவரிடம் பணம் பறித்த வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வசந்தி ஜாமீன் பெற்றார்.
கடந்த ஆகஸ்ட் 24-ல் மதுரை குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் சில காவலர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து வசந்தி எங்கே எனக் கேட்டனர். அப்போது போலீஸார் என்னையும், எனது குடும்பத்தி னரையும் பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசினர். வசந்திக்கும் எங்களுக்கும் தற்போது எந்த தொடர்பும் இல்லை. இருப்பினும் வழக்கு விசாரணைக்காக தேனி மற்றும் மதுரைக்கு வருமாறு போலீஸார் எங்களை அலைக்கழித்து வருகின்றனர்.
எனவே, போலீஸார் என் வீட்டில் அத்துமீறி நுழைந்து பொது இடத்தில் என்னையும், குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வரும் நாட்களில் போலீஸார் வசந்தியின் குடும்பத்தினரை விசாரிக்க அவர்கள் வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள். மனுதாரரின் புகார் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.