

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘டாம்கோ’, ‘டாப்செட்கோ’ திட்டத்தின் கடனுதவி பெறு வதற்கான சிறப்பு முகாம்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் 17-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள சிறுபான்மையினருக்கு ‘டாம்கோ’ கடன் திட்டத்தின் மூலம் தனிநபர், மகளிர் குழுக்களுக்கான சிறு கடன், கல்விக்கடன் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. கடன் பெற 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அதேபோல், பிசி., எம்பிசி., சீர் மரபினர் பிரிவினருக்கு ‘டாப்செட்கோ’ கடன் திட்டத்தில் பொது கால கடன், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு சிறு கடன், சிறு, குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதிகள் அமைக்க மானியத்துடன் கூடிய கடன் பெற 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
‘டாம்கோ’, ‘டாப்செட்கோ’ திட்டத்தில் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, வாலாஜாவில் 17-ம் தேதி, ஆற்காட்டில் வரும் 23-ம் தேதி, அரக்கோணத்தில் வரும் 18-ம் தேதி, நெமிலியில் வரும் 19-ம் தேதி, கலவையில் வரும் 24-ம் தேதி, சோளிங்கரில் வரும் 25-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பகல் 2 மணிவரை நடைபெறும் முகாம்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.