வடகிழக்குப் பருவமழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய - கிருஷ்ணகிரியில் 35 இடங்களில் கண்காணிப்பு : தயார் நிலையில் 2054 முன்களப் பணியாளர்கள்

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வடகிழக்கு பருவமழையையொட்டி அமைக்கப்பட்டுள்ள மீட்பு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். அருகில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி.
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வடகிழக்கு பருவமழையையொட்டி அமைக்கப்பட்டுள்ள மீட்பு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். அருகில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவ மழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய 35 இடங்கள் கண்டறியப்பட்டு 47 மீட்பு மையங்கள் மற்றும் 2054 மீட்பு முன்களப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நிலச் சீர்திருத்தத்துறை, அரசு முதன்மை செயலருமான மருத்துவர் பீலா ராஜேஷ் தலைமை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி முன்னிலை வகித்தார்.கூட்டத்துக்கு பின்னர் திம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு மையம் மற்றும் உணவு தயாரிக்கும் கூடங்கள், அவதானப்பட்டி படகு இல்லத்தில் தீயணைப்புத்துறை வீரர்கள் பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து நடைபெற்ற செயல்விளக்க நிகழ்ச்சியை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவ மழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய 35 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று அவர்களை தங்க வைப்பதற்காக 47 மீட்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

ஏரி, குளங்கள் நீர் நிரம்பி உடைப்பு ஏற்படாத வகையில் தடுக்க போதிய அளவில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்புத்துறை சார்பில் இதுவரை 70 பேரிடர் செயல்விளக்கப் பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 2054 மீட்பு முன்களப் பணியாளர்கள், ஜேசிபி இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வடகிழக்குப் பருவமழை முடியும் வரை ஆறு, ஏரி, குளங்களுக்கு செல்வதை தவிர்த்தும், கால்நடைகள் நீர்நிலைகளை கடந்து செல்வதை தவிர்த்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஷ்வரி, திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட வனஅலுவலர் கார்த்திகேயணி, ஏடிஎஸ்பி விவேகானந்தன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஓசூர் தேன்மொழி, கிருஷ்ணகிரி சதீஸ்குமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) பரமசிவன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கோவிந்தன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in