கைதான மகேந்திரமால். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி.
கைதான மகேந்திரமால். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி.

வேலூரில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய - ஆவின் உதவி பொதுமேலாளர் கைது :

Published on

வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பால் குளிரூட்டும் நிலையத்துடன் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பிரிவுடன் மதிப்பு கூட்டப்பட்ட பால் உப பொருட்கள் தயாரிப்பு பிரிவும்இயங்கி வருகிறது. பால் உற்பத்தி பிரிவில் கூட்டுறவு ஒன்றிய பணியாளர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவன பணியாளர்கள் சிலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாதந்தோறும் தனியார் நிறுவனம் மூலமாக சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தனியார் பணியாளர் ஒப்பந்ததாரராக காட்பாடி கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஜெயகரன் என்பவர் உள்ளார். இவருக்கு, ஆவின் நிர்வாகம் சார்பில் ரூ.5.23 லட்சம் தொகை வழங்கவேண்டியுள்ளது. இந்த தொகைக்கான காசோலையை வழங்க ஆவின் உதவி பொதுமேலாளர் மகேந்திரமால் (57) என்பவர் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் பணத்தை கறாராக வாங்கும் மகேந்திரமாலுக்கு தொடர்ந்து பணம் கொடுக்க விரும்பாத ஜெயகரன், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார். அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை காவல் துறையினர் கொடுத்தனுப்பினர். அந்த பணத்தை நேற்று பெற்றுக்கொண்ட மகேந்திரமாலை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் கைது செய்தனர்.

பின்னர், வேலூர் தென்றல் நகரில் உள்ள அவரது வீட்டில் நடத்திய சோதனையில் நாட்டு கைத்துப்பாக்கி ஒன்றும், 8 தோட்டாக் களும் பறிமுதல் செய்யப்பட்டன. உத்தர பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட மகேந்திரமால், இந்த துப்பாக்கியை எப்போது வாங்கி னார் என்பது குறித் தும் விசாரித்து வருகின் றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in