இயல்பு வாழ்க்கை பாதிப்பு -  மழையால் முடங்கியது கடலூர் மாவட்டம் :

இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மழையால் முடங்கியது கடலூர் மாவட்டம் :

Published on

கடலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை தொடர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மக்கள் நேற்று வீட்டுக்குள்ளே முடங்கினர். குறிஞ்சிப்பாடி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, கீரப்பாளையம், முஷ்ணம், கடலூர் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது.

‘வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நீர்நிலைகளில் இறங்கி குளிக்கக் கூடாது’ என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அபாயகரமான பகுதிகளில் போலீஸார் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர். மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் வாய்க்கால்களை தூர் வாரி வருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பருவ நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் காய்கறி விலைகள் உயர்ந்துள்ளன. பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ. 50ல் இருந்து ரூ. 60க்கும், சாம்பார் வெங்காயம் 1கிலோ 40ல் இருந்து ரூ. 50க்கும், உருளைக்கிழங்கு 1கிலோ ரூ. 30ல் இருந்து ரூ.40க்கும் உயர்ந்துள்ளன.தக்காளி 1 கிலோ ரூ. 50ல் இருந்து ரூ. 60க்கும் விலை உயர்ந்துள்ளன.

நேற்றும் மழை தொடர்ந்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in