

பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி தினக்கூலியாக ரூ.580 வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்புநிதி, இஎஸ்ஐ, காப்பீட்டு தொகை விவரங்களை வழங்க வேண்டும். கடந்த ஒப்பந்த காலத்தில் செலுத்தப்படாத பி.எஃப் தொகையை ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். கரோனா காலத்தில் தூய்மை காவலர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். இஎஸ்ஐ திட்டத்துக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புச் சாதனங்கள் வழங்க வேண்டும். பயோ காஸ் பிளான்ட்டில் பணிபுரிந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்த தொழிலாளர்கள் ராமர், மருதைவீரன் ஆகியோரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.