மழையால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் : நல்லகட்டிபாளையம்-குன்னத்தூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் மக்கள் அவதி

மழையால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் :  நல்லகட்டிபாளையம்-குன்னத்தூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் மக்கள் அவதி
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு கருப்பராயன் நகரில், 5 வீதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் சாக்கடைக் கால்வாய் இருந்தும் கழிவுநீர் வெளியேறுவதற்கு வழியில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டுநாட்களாக பெய்த பலத்த மழையால், 5 வீதிகளிலும் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. கழிவுநீரும், மழைநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால், அப்பகுதிகளில் இருந்த பொதுமக்களை மும்மூர்த்தி நகர் நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி அதிகாரிகள் தங்கவைத்தனர்.

தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். தேங்கியிருந்த கழிவு நீர், தனியார் இடத்தில்வெளியேற்றப்பட்டது.

இதையடுத்து அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

260 அடி நீளத்துக்கு குழாய்பதிக்கப்பட்டு, அதன்மூலமாக தனியார் இடத்தின் வழியாக கழிவு நீரை கொண்டு செல்லும் வகையில் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் உறுதி அளித்தார்.

மாநகராட்சி ஆணையர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்து, கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டால், குழாய்கள் சேதமடையாமல் இருக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்குஉத்தரவிட்டார். இதையடுத்து, மும்மூர்த்தி நகரில் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்த பகுதிகளைஆய்வு செய்து, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குன்னத்தூர் அருகே நேற்று 2-ம் நாளாக நல்லகட்டிபாளையம்- குன்னத்தூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பாலத்தை பயன்படுத்தவில்லை. அப்பகுதியில் நல்லகட்டி பாளையம் குளம், துலுக்கமுத்தூர் குளம் ஆகியவை நிரம்பியதால், பாலம் மூழ்கியதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

அதேபோல 4 ஆண்டு களுக்குப்பின் நிரம்பிய பட்டம் பாளையத்தில் உள்ள கருப்பராயன் கோயில் குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குளம் நிரம்பி தண்ணீர் அருவிபோல கொட்டுவதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் வியப்புடன் பார்த்துச்செல்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in