

வேலூரில் பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி பிரிவு செயற்பொறியாளரிடம் ரூ.2.26 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் துண்டு சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் கோட்டம் பொதுப் பணித்துறை தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளராக இருப்பவர் ஷோபனா (57). இவர், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் அவர் பயணித்த வாகனத்தை கடந்த 2-ம் தேதி இரவு லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத பணம் ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரது அலுவலகத்துக்கு அருகேயுள்ள பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் அவர் தங்கியிருந்த அறையில் சோதனையிட்டதில் மேலும் ரூ.15.85 லட்சம் ரொக்கம், ஆவணங்கள், வங்கி காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரில் உள்ள ஷோபனாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.06 கோடி ரொக்கம் மற்றும் 11 வங்கிக்கணக்கு புத்தகங்கள், ரூ.28 லட்சம் அளவுக்கு வங்கி வைப்பு நிதி முதலீடுகள், 14 சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஷோபனா மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.2.26 கோடி ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்களை வேலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நாளை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஷோபனா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையினர் அறிக்கையும் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ஷோபனாவிடம் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நேரத்தில் அவரது கைப்பையை சோதனையிட்டதில், ஒரு துண்டு சீட்டில் வாலாஜாபேட்டை - 1,74,42,691 என்றும், அதற்கு கீழே 6,60,000 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இஇ (செயற் பொறியாளர்) 1% - 2,57,033 என்றும், எஸ்டிஓ-க்கு ஒன்றரை சதவிகிதம் என இருந்தது. மற்றொரு வெள்ளை தாளில் பெண்கள் கல்லூரி- விழுப்புரம் என்றும் அதன் கடைசியில் 7% - 1,82,000 என இருந்தது. அந்த தாளின் பின்பக்கத்தில் தருமபுரி எஸ்டி (துணை கோட்டம்) என குறிப்பிட்டு கடைசி வரியில் 4,25,000 என இருந்தது.
இந்த குறிப்புகள் அனைத்தும் லஞ்சப் பணம் தொடர்பான விவரங்கள் என யூகிக்க முடிகிறது. எனவே, ஒப்பந்ததாரர்கள் குறித்த விவரங்கள், கடைசியாக எந்தெந்த கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது, தற்போது நடைபெறும் பணிகள், அதற்கான நிதியை விடுவித்தது போன்ற விவரங்களை சேகரித்து விசாரிக்க வேண்டியுள்ளது.
இதற்காக, ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஷோபனாவின் குறிப்புகளில் உள்ள துணை கோட்ட பொறியாளர்களை அழைத்து விசாரிக்க உள்ளோம்.
அதேபோல், ஷோபனாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 11 வங்கிக்கணக்கு புத்தகங்களில் வரவு செலவு விவரங்களை அளிக்கும்படியும் கணக்குகளை முடக்கி வைக்கவும் வங்கிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றனர்.