

மதுரையில் தீபாவளியையொட்டி நேற்று ஒரே நாளில் 950 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
மதுரையில் தீபாவளி கொண்டாட்டம் முதல்நாளே களை கட்டியது. வீடுகளில் மக்கள் புத்தாடை அணிந்தும், விதவிதமான பலகாரங்கள் உண்டும் மகிழ்ந்தனர். அதன்பின் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து சமூகத்தினரும் தீபாவளி கொண்டாடியதால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த நிலையில், தீபாவளியன்று மழை பெய்யவில்லை. அதனால் தடையின்றி பட்டாசுகளை வெடித்தனர்.
பண்டிகை முடிந்த நிலையில், நேற்று நகரில் திரும்பிய பக்கமெல்லாமல் பட்டாசு குப்பைகள் கிடந்தன. கடந்த 2 நாட்களாக நகரில் மலைபோல குப்பை தேங்கியது. நேற்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அப்புறப்படுத்தினர். இவர்களுக்கு தன்னார்வ அமைப்பினரும் உதவினர்.
வழக்கமாக 100 வார்டுகளிலும் சுமார் 600 டன் குப்பைகள் சேரும். ஆனால் நேற்று முன்தினம் ஒரேநாளில் 950 டன் குப்பைகள் சேர்ந்தன.
சுகாதாரத்துறை அதிகாரி கூறுகை யில், ‘‘நேற்று வழக்கமான குப்பையுடன், பட்டாசு குப்பையும் சேர்ந்தது. இவற்றை இரவு பகலாக தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்" என்றார்.