திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஓராண்டாக மூடி கிடக்கும் கடைகள் : பேரூராட்சிக்கு வருவாய் பாதிப்பு

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஓராண்டாக மூடி கிடக்கும் கடைகள் :  பேரூராட்சிக்கு வருவாய் பாதிப்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஓராண்டாக கடைகள் மூடிக் கிடப்பதால் பேரூராட்சிக்கு வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் வழியாக திண்டுக்கல்-காரைக்குடி, மதுரை-தேவகோட்டை, மானாமதுரை-தஞ்சை ஆகிய மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. தினமும் 380 பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால் திருப்பத்தூர் பேருந்து நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். இட நெருக்கடியில் இருந்த பேருந்து நிலையத்தை விரிவாக்க செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து அப்பேருந்து நிலையம் ரூ.3.25 கோடியில் சீரமைக்கப்பட்டது. மேலும் அங்கு 43 கடைகள் கட்டப்பட்டன. இந்த பேருந்து நிலையத்தை அப்போதைய முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு டிச.4-ம் தேதி திறந்து வைத்தார்.

ஆனால் அதன்பிறகும் செயல்படாமல் இருந்தது. இதையடுத்து பேருந்து நிலையத்தை செயல்பட மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நடவடிக்கை எடுத்தார். ஆனால் கடைகளை திறக்க 3 முறை ஏலம் விட்டும் வியாபாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் நடத்த முடியவில்லை.

பழைய வியாபாரிகள் தங்களுக்கே கடைகள் வேண்டுமென்றும், ஆனால் ஒரு தரப்பினர், அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் பொது ஏலம் நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கடைகளை திறப்பதில் ஓராண்டாக இழுபறி நீடிக்கிறது. கடைகளை திறக்காததால் பேரூராட்சிக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகளும் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடைகளை ஏலம் விடுவது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. சில வழக்குகள் தள்ளுபடி ஆகிவிட்டன. மற்ற வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வந்துவிடும். அதன்பிறகு முறைப்படி ஏலம் நடத்தி கடைகள் ஒதுக்கப்படும்,’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in