

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று (4-ம் தேதி) தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 6 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி வள்ளி,தெய்வானை அம்பாளை எழுந்தருளச்செய்யும் பூஜைகள் மற்றும் 7 மணிக்கு மேல் மகுடாபிஷேகம் நடைபெற்று சஷ்டி விழா தொடங்குகிறது.
வழக்கமாக 5-ம் நாள் நடைபெறும் தாரகாசூரன் சம்ஹாரம் இந்தாண்டு 6-ம் நாளான நவ.9-ம் நடைபெறுகிறது. அன்று, சுவாமி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோயில் வளாகத்தில் பகல் 11 மணிக்கு தாரகாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மாலை 3 மணியளவில் சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் போர்க்களம் வந்து, 5 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
12-ம் தேதி இரவு 7.40 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா கோயில் வளாகத்துக்குள் எளிமையான முறையில் அரசு விதிகளின் படி நடைபெறுகிறது. சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நிகழ்ச்சிகள் உள்ளூர் தொலைகாட்சி மற்றும் இணையதளம் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் செய்திருந்தார்.