

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-2022-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி 12.11.2021 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் தேர்வு செய்வர்.
கல்லூரி, பள்ளி போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.