போக்குவரத்து நெரிசலை குறைக்க - கள்ளக்குறிச்சி நகரில் சுற்றுச்சாலை : நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் எ.வ.வேலு.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் எ.வ.வேலு.
Updated on
2 min read

கள்ளக்குறிச்சி நகரில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க சுற்றுச்சாலை ஏற்படுத்தப்படும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டவளர்ச்சிப் பணிகள் குறித்துஅனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.என்.தர்தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா.உதயசூரியன், க.கார்த்திகேயன், ஏ.ஜே.மணிக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் சங்கராபுரத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.35 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

11 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும், 10 நபர்களுக்கு ரூ.2,01,542 மதிப்பீட்டில் வீட்டு மனை ஒப்படைப்புகளையும் வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு, தொடர்ந்து 97 பயனாளிகளுக்கு ரூ.1,29,52,019 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் கிராமங்கள் நிறைந்த மாவட்டம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக கவனம் செலுத்தி மேம்படுத்துவதோடு, நீர்நிலைகளில் அதிக கவனம் செலுத்தி இம்மமாவட்டத்திலுள்ள 690 ஏரி, குளங்களை தூர் வாரி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்பகுதிக்கு பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். சாலை மேம்பாடு என்பது இப்பகுதிகளில் மிக முக்கியமா கருதப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் மிகுந்த கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்கள் பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பட்டாக்கள்வழங்கும் பட்சத்தில் பட்டா வழங்கிய மறுதினமே அரசுப் பதிவேட்டில் பட்டாவினை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

இப்பணியினை கவனமுடன் தொடர்புடைய கோட்டாட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். முதியோர்கள் மற்றும் மாற்றுத்தி றனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து அவற்றிற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

550 ஹெக்டேர் பரப்பளவு உள்ள கல்வராயன் மலை பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளான சாலை வசதி,குடிநீர் வசதி மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை துறை சார்ந்த அலுவலர்கள் நிறைவேற்றிட வேண்டும். குறிப்பாக கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சுற்றுச் சாலை, இணைப்புச் சாலை மற்றும் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையை நான்கு வழிச் சாலையாக அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதில் அதிக கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுத்திட வேண்டும்.இம்மாவட்டத்திலுள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த பணிகளில் பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடனும் அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றி பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாலமாக செயல்பட்டு மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக திகழ வேண்டும் என்றார்.

கூட்டத்தைப் புறக்கணித்த கள்ளக்குறிச்சி திமுக எம்பி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச் சர் க.பொன்முடியும், அவரது மகனும் ஆதிக்கம் செலுத்துவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக எம்எல்ஏ-க்கள் திமுக தலைமையிடம் புகார் தெரிவித்த நிலையில், பொன்முடி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனவே தனது தந்தைக்கு உரிய மரியாதை இல்லாததால், கவுதமசிகாமணி கூட்டத்தை புறக்கணித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாக பேசிக் கொண்டனர். இதுகுறித்து கருத்து அறிய கவுதமசிகாமணியை தொடர்புகொண்டபோது, அவர் பேச முன்வரவில்லை.

சாலை மேம்பாடு என்பது இப்பகுதிகளில் மிக முக்கியமா கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in