

வேலூர் விருப்பாட்சிபுரம் கே.கே.நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த 6 நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. அங்குள்ள குடிநீர் விநியோகம் செய்யும் நபர் சரியாக பணிக்கு வரவில்லை என்றும் சேதமடைந்த குடிநீர் குழாயை சரி செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து புகார் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று சமாதானம் செய்தனர். மேலும், அந்த பகுதிக்கு உடனடியாக டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்ததுடன் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை விரைவில் சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.