தமிழக ஆளுநர் அறிக்கை கேட்டதை அரசியலாக்க கூடாது : தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

பெருமாநல்லூர் மகா பெரியசாமி கோயிலில் நேற்று குடும்பத்துடன் வழிபாடு செய்த தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
பெருமாநல்லூர் மகா பெரியசாமி கோயிலில் நேற்று குடும்பத்துடன் வழிபாடு செய்த தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
Updated on
1 min read

தமிழக ஆளுநர் தலைமைச் செயலரிடம் அறிக்கை கேட்ட விவகாரத்தை அரசியலாக்க கூடாது என தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கோவையில் நேற்று தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கரோனா உச்சத்தில் இருந்தபோது சிறப்பாக பணி செய்தவர்களைப் பார்த்து நன்றி சொல்லவும், பாராட்டவுமே கோவை வந்துள்ளேன். அவர்களிடம் கலந்துரையாடியதில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு அளித்த ஊக்கமே இதற்கு காரணம் என்றனர்.

இந்தியாவில் தற்போது வரை 104 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்தி மிகப்பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டியதன் பின்புலத்தில் மிகப்பெரும் உழைப்பு உள்ளது. மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு மத்திய அரசு இந்த இலக்கை எட்டியுள்ளது. கரோனா தொற்று மீண்டும் ஆங்காங்கு பரவத் தொடங்கியுள்ளது. எனவே, பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

தமிழக ஆளுநர் தலைமைச் செயலரிடம் அறிக்கை அல்லது தகவல் பெறலாமா என்ற விமர்சனம் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது. நான் பொறுப்பு வகிக்கும் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் அரசிடமிருந்து தகவல் சேகரித்துள்ளேன். வரும் 11-ம் தேதி டெல்லியில் ஆளுநர்களுக்கான மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில், திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதை தெரிவிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் அதற்காகவே ஆளுநர் தகவல் கேட்டிருப்பார். எதார்த்தமாக நடக்கும் விஷயம் இது. தமிழக அரசுக்கு இதுகுறித்த புரிதல் உள்ளது. அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தேவையில்லாமல் விமர்சிக்கின்றனர். அந்தந்த மாநிலங்களுக்கு உதவவே இந்த செயல்பாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குலதெய்வ கோயிலில் வழிபாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in