

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி வரும் 12-ம் தேதி நடக்கிறது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளான குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டி வரும் 12-ம் தேதி நடக்கவுள்ளது.
இப்போட்டிகள் சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (திருவள்ளுவர் சிலை அருகில்) நடக்கவுள்ளது. காலை 10 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கும், மதியம் 2 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும் நடக்கிறது . இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் நேரடியாக போட்டி நடக்கும் இடத்துக்கு வந்து பங்கேற்கலாம்.
போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் முதல் மூன்று பரிசு பெறும் மாணவர்களுடன் பங்கேற்ற மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவரைத் தேர்வு செய்து சிறப்புப் பரிசுத் தொகையாக தலா ரு.2,000 வழங்கப்படும்.
போட்டி தொடர்பாக கூடுதல் தகவல்கள் பெற 0427- 2417741 என்ற தமிழ்வளர்ச்சித் துறை அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.