பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுவது குறித்து பயிற்சி :
பர்கூர் பேரூராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், பர்கூர், தேன்கனிக்கோட்டை, நாகோஜனஹள்ளி உள்ளிட்ட பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில், பர்கூர் பேரூராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், அலுவலக பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் பயிற்சி பெற்ற, பர்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன் அளித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு செயல்விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி முகாமில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குருராஜன், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
