

திருச்சி மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் 137 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற க.கார்த்திகேயன் மாநகரில் குற்றச் செயல்களை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களில் 100 வழக்குகளில் 103 ரவுடிகளையும், குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் 23 வழக்குகளில் தொடர்புடைய 34 ரவுடிகளையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணம் உடைய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 42 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாநகரில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆணையர் க.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.