விபத்து முதலுதவி அளிக்க, போக்குவரத்து ஒழுங்குபடுத்த - திருச்சி மாநகரில் ‘டிராபிக் மார்ஷல்’ போலீஸ் :

விபத்து முதலுதவி அளிக்க, போக்குவரத்து ஒழுங்குபடுத்த -  திருச்சி மாநகரில் ‘டிராபிக் மார்ஷல்’ போலீஸ் :
Updated on
1 min read

திருச்சி மாநகரில் விபத்து நடைபெறும் பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று முதலுதவி அளிக்கவும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் இடங்களுக்கு உடனடியாகச் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் ‘டிராபிக் மார்ஷல்' என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி கன்டோன்மென்ட், அரியமங்கலம், பாலக்கரை, கோட்டை, உறையூர், ரங்கம் ஆகிய 6 போக்குவரத்து ஒழுங்கு பிரிவுக்கும் தலா 2 ‘டிராபிக் மார்ஷல்' என்றழைக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்களிடம் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் நேற்று வழங்கினார். மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் சக்திவேல், முத்தரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் குறித்து காவல் ஆணையர் க.கார்த்திகேயன் கூறும்போது, ‘‘இந்த டிராபிக் மார்ஷல் வாகனத்தில் முதலுதவி பெட்டி மற்றும் மீட்பு உபகரணங்கள் இருக்கும். இந்த வாகனங்களில் பணியில் இருப்போருக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த சில நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்து முதலுதவி மேற்கொள்ளுதல், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் ஆகியவையே இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதான பணி’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in