

திட்டம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில் 100 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதல்கட்டமாக, சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. பின் னர், முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 1-ம் தேதி முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடக் கத்தில், தடுப்பூசி தொடர்பான அச்சம் காரணமாக, அதை செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இதையடுத்து, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்தன. இதன் பயனாக, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயரத் தொடங்கியது.
நாட்டில் முதல் 10 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்த 85 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், அடுத்த 10 கோடி டோஸ் களை 45 நாட்களிலேயே இந்தியாவால் செலுத்த முடிந்தது. இவ்வாறு அடுத் தடுத்த 10 கோடி தடுப்பூசி டோஸ் இலக்குகளை மிகக் குறுகிய நாட்களிலேயே மத்திய, மாநில அரசுகள் அடைந்தன. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி 50 கோடி டோஸ்களை செலுத்தி மிகப்பெரிய மைல்கல்லை இந்தியா தொட்டது.
டிசம்பர் இறுதிக்குள் 100 கோடி டோஸ்கள் என்ற இலக்கினை மத் திய அரசு நிர்ணயித்தது. நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அவ்வப்போது நாடு தழுவிய அளவில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், நேற்று (அக்.21) 100 கோடி தடுப்பூசி டோஸ்களை கடந்து மிகப்பெரிய சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. நிர்ணயிக் கப்பட்ட இலக்கை 2 மாதங்களுக்கு முன்பாகவே இந்தியா எட்டியிருப்பது உலக நாடுகள் அனைத்தையும் ஆச் சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெ ரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் போன்ற தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நாடுகள்கூட, தங்கள் மக்களுக்கு இவ்வளவு வேகமாக தடுப்பூசிகளை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே, நாட்டிலேயே அதிக அளவில் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
வரலாறு படைத்த இந்தியா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் மகத்தான ஆற்றலை உலகத்துக்கு நாம் மீண்டும் நினை வூட்டி உள்ளோம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பெருமைமிகு தருணமாகும். இந்த சாதனையை படைக்க சுகாதாரத் துறையினரும், மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் பல சவால்களை கடந்து வந்திருப்பர். அவர்களுக்கும், இதற்கு உறுதுணை யாக இருந்த பிரதமருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட வியா உள்ளிட்ட மத்திய அமைச்சர் கள், பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக் கள் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் வாழ்த்து
தேசியக் கொடி வண்ணத்தில்
100 பாரம்பரிய சின்னங்கள்
இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன உயரதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் 100 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்படும்போது, 100 பாரம்பரிய சின்னங்களுக்கு தேசியக் கோடியின் வண்ணத்தில் ஒளியூட்ட ஏற்கெனவே முடிவு செய்திருந்தோம். அதன்படி, தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். செங்கோட்டை, குதுப் மினார், ஹுமாயூன் கல்லறை, துக்ளகாபாத் கோட்டை, ஃபடேஹ்பூர் சிக்ரி ஆக்ரா, ராமப்பா கோயில், மெட்காஃப் ஹால் உள்ளிட்ட 17 யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் உட்பட நாடு முழுவதும் 100 பாரம்பரியச் சின்னங்கள் தேசியக் கொடியின் வண்ணத்தில் ஒளியூட்டப்படும்.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கரோனா பெருந்தொற்றை துணிச்சலுடன் எதிர்த்து போராடும் மக்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த ஒளியூட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.