ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் உயிரிழந்த வழக்கு - மீண்டும் தொடர் விசாரணை நடத்த சேலம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை :

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் உயிரிழந்த வழக்கு -  மீண்டும் தொடர் விசாரணை நடத்த  சேலம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை :
Updated on
1 min read

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கில் மீண்டும் தொடர் விசாரணை நடத்த சேலம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் (36) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஜெயலலிதா ஓய்வெடுக்க பயன்படுத்தி வந்த நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளை போனது. மேலும், அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த கனகராஜ் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கடந்த 2017- ம் ஆண்டு ஏப்ரல் 28- ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆத்தூர் நகர போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கனகராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கனகராஜின் சகோதரர் தனபால் குற்றம்சாட்டினார். இந்நிலையில், கனகராஜ் உயிரிழந்த வழக்கில் ஏற்கெனவே இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கை ஆத்தூர் டிஎஸ்பி தலைமையில் தொடர்ந்து, விசாரிக்க சேலம் மாவட்ட போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in