

கடலூர் மாநகராட்சி அறிவிக்கப்பட்ட நிலையில், அம்மாநகராட்சி செயல்படுவதற்கான மாநகராட்சி அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றி வெளியிட்டுள்ளது.
கடலூர் நகராட்சி 45 வார்டுகள் மற்றும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையுடன் இயங்கி வருகிறது. இந்நகராட்சியை சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகள், நகர்புறங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்று வருகின்றன. அவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டம்,புதைவட மின் விநியோகம் போன்ற சேவைகளை அரசு வழங்க வேண்டியுள்ளது. அதனால் கடலூர் நகராட்சியை சுற்றியுள்ள, வளர்ச்சி அடைந்த உள்ளாட்சிகளாக அடையாளம் காணப்பட்ட 22 உள்ளாட்சிகளை இணைத்து கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். ஒவ்வொரு மாநகராட்சியும், அதற்கென உருவாக்கப்பட்ட மாநகராட்சி சட்டப்படி இயங்க வேண்டியுள்ளதால், கடலூர் மாநகராட்சிக்கான சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது. தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், அவரசர சட்டமாக இயற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ளது.