

ராயக்கோட்டை அருகே கணவரைக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள குட்டூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாரப்பன்(45). நேற்று முன்தினம் ராயக்கோட்டை தக்காளிமண்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தலையில் காயத்துடன் மாரப்பன் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது மனைவி குண்டம்மாள் (35) ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும், மாரப்பனின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வில், மாரப்பன் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், குண்டம்மாள், தனது நண்பர் சிவசங்கர் (31) என்பவருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து குண்டம்மாள், சிவசங்கர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.