

தூத்துக்குடியில் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தூத்துக்குடி நேதாஜி நகர் காட்டுப் பகுதியில் நேற்று சிலர் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள உயரழுத்த மின் கோபுரத்தில் இருந்து திடீரென சத்தம் கேட்டுள்ளது. அங்கு பார்த்தபோது ஒருவர் மின்கம்பியில் சிக்கியிருந்தார். தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார், மின்சார வாரியத்தினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்தனர். 110 கிலோவாட் மின் திறன் கொண்ட உயரழுத்த மின் கோபுரம் என்பதால், சிப்காட் துணை மின்நிலையத்தில் மின் இணைப்பை துண்டிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உரிய அனுமதி பெறப்பட்ட பிறகு, மின் இணைப்பை துண்டித்தனர்.
தொடர்ந்து, தீயணைப்புத்துறை யினர் இறந்தவரின் உடலை கயிறு கட்டி இறக்கினர்.
அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூரைச் சேர்ந்த பலவேசம் மகன் மணி பாரதி(18) என்பது தெரியவந்தது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவர் எனக்கூறப்படுகிறது.