

நயினார்கோவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.1.45 கோடி மோசடி செய்த இரண்டு பெண் வங்கி மேலாளர்கள் உட்பட 3 பேரை வணிகக் குற்றப் புலனாய்வு போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவிலில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை செயல்படுகிறது. இவ்வங்கியில் 1.1.2012 முதல் 31.3.2018 வரை போலி ஆவணங்கள் மூலம் போலியான சுய உதவிக் குழுக்கள் பெயரில் கணக்குகள் தொடங்கி, அக்கணக்குகள் பெயரில் கடன் வழங்கி ரூ.1.45 கோடி மோசடி செய்திருப்பது மத்திய வங்கித் தலைமையகத்துக்குத் தெரிய வந்தது.
அதையடுத்து ராமநாதபுரம் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் விசாரணை செய்து, ரூ.1.45 கோடி மோசடி செய்ததாக வங்கியின் கிளை மேலாளர் பரமக்குடியைச் சேர்ந்த பூர்ணசந்திரமதி(48), காசாளர் பரமக்குடி அருகே உள்ள கஞ்சியேந்தலைச் சேர்ந்த சத்தியமூர்த்தி(41), உதவி மேலாளர் பரமக்குடியைச் சேர்ந்த சுந்தரகாளீஸ்வரி(45) ஆகியோர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.