

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா சூரசம்ஹாரம் மற்றும் காப்பு களைதலுடன் நேற்று நிறைவுபெற்றது.
நேற்று முன்தினம் இரவு கோயில் முன் மண்டபத்துக்கு வந்த அம்மனை மகிஷாசூரன் மூன்று முறை வலம் வந்தார். 12 மணிக்கு சுய தலையுடனும், 12.10-க்கு சிங்கமுகத்துடனும்,12.15 மணிக்கு எருமைத் தலையுடனும், 12.20 மணிக்கு சேவல் தலையுடனும் வந்த சூரனை அம்மன் வதம் செய்தார். தொடர்ந்து, அதிகாலையில் அன்னைக்கும், சூலாயுதத்துக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று மாலை 5 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகார பவனி வந்தார். அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும், காப்பு களைதலும் நடந்தது.
பக்தர்கள், தசரா குழுவினர் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களில் காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்தனர். இரவு 8 மணிக்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று (17-ம் தேதி) பகல் 12 மணிக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.