சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநரின் - வீட்டு வேலைகளுக்கு ஈடுபடுத்தப்படும் 100 நாள் திட்ட பணியாளர்கள் : காஞ்சிரங்கால் ஊராட்சி நிதி வீணடிக்கப்படுவதாக மக்கள் புகார்

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநரின் -  வீட்டு வேலைகளுக்கு ஈடுபடுத்தப்படும் 100 நாள் திட்ட பணியாளர்கள் :  காஞ்சிரங்கால் ஊராட்சி நிதி வீணடிக்கப்படுவதாக மக்கள் புகார்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநரின் வீட்டு வேலைகளுக்கு 100 நாள் திட்டப் பணியாளர்களை ஈடுபடுத்துவதாகவும், இதன் மூலம் காஞ்சிரங்கால் ஊராட்சி நிதி வீணடிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த 6 மாதங்களில் 3 திட்ட இயக்குநர்கள் மாறியுள்ளனர். சில வாரங்களுக்கு முன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். சில தினங்களுக்கு முன் காஞ்சிரங்கால் ஊராட்சியைச் சேர்ந்த 100 நாள் திட்டப் பணியாளர்களை சிவகங்கை நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநரின் வீட்டு வேலைகளுக்கு ஈடுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

அவரது வீட்டில் அக்.12, 13-ம் தேதிகளில் 70-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர். ஆனால், காஞ்சிரங்கால் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஊருணி முட்செடிகள் மண்டிக் காணப்படுகிறது. மேலும் அதற்குரிய நீர் வரத்துக் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. அதேபோல் மூலக்கரை, காஞ்சிரம், கூனி கண்மாய்களும் சீரமைக்கப்படாமல் உள்ளன.

ஆனால் அவற்றைச் சீரமைக்க 100 நாள் திட்டப் பணியாளர்களை ஈடுபடுத்தாமல் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு ஈடுபடுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் 100 நாள் திட்ட நிதி முறைகேடாகச் செலவழிக்கப்பட்டு வருவதாகவும் முறையாக சமூகத் தணிக்கை செய்து ஊராட்சி நிதியை அதன் பகுதியிலேயே செலவழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது: காஞ்சிரங்காலில் முறையாக குப்பை அள்ளுவதில்லை. கழிவுநீர் செல்ல வழியில்லை. நீர் நிலைகள் தூர்வாரப்படவில்லை. அவற்றைச் சீரமைக்கும் பணியில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களை ஈடுபடுத்துவதில்லை. பெரும்பாலும் சிவகங்கை நகர் பகுதிகளிலேயே பணி கொடுக்கின்றனர்.

இதன் மூலம் எங்கள் கிராம நிதி தேவையின்றி விரயம் செய்யப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் 100 நாள் திட்டத்தில் வேலை தர முடியாது என்கின்றனர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in