பெரம்பலூர் சாத்தனூரில் கல்மர விளக்க மையம் திறப்பு :

பெரம்பலூர் சாத்தனூரில் கல்மர விளக்க மையம் திறப்பு  :
Updated on
1 min read

புதை படிமங்கள் குறித்து மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூரில் கல்மரம் விளக்க மையத்தை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா தலைமை வகித்தார். எம்எல்ஏ ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அருங்காட்சியகத்தையும், ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறுவர் பூங்காவையும் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்ததாவது:

பொதுமக்களும், மாணவ,மாணவிகளும் பயன்பெறும் வகையிலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்லுயிர், கல்மரப் படிமங்கள் குறித்து உலகிற்குத் தெரியப்படுத்தும் விதமாகவும் இச்செயல் விளக்கமையம் இருக்கும். பெரம்பலூர் மாவட்டத்தின் புவியியல் தொன்மை குறித்த பெருமையை பறை சாற்றும் வண்ணம் இம்மையம் விளங்கும்.

இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பயணியர் தங்குமிடமும், அருங்காட்சியகமும் ரூ.50.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள புதைபடிம புவியியல் பூங்காவை பாதுகாக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோ வடிவிலான காட்சியகமும் நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in