

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் ஏராளமானோர் மனுக்களை அளித்தனர்.
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரி விதிப்பு, தொழில் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், குடிநீர் இணைப்பு வழங்குதல், பாதாள சாக்கடை இணைப்பு வழங்குதல் தொடர்பாகவும், தெரு விளக்கு, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மனு அளித்து பொதுமக்கள் தீர்வு பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் அந்தந்த மண்டல அலுவலகங்களில் ஏற்கெனவே பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்று வந்தது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் இந்த முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மீண்டும் குறை கேட்பு முகாம்களை வாரம் ஒரு மண்டலத்தில் நடத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மேற்கு மண்டல அலுவலகத்தில், உதவி ஆணையர் என்.அண்ணாதுரை தலைமையில் நேற்று குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
பி.என்.புதூரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் அளித்த மனுவில், “கரோனா தடுப்பூசி மையப் பட்டியலில் இருந்து பாப்பநாயக்கன்பதூர் தடுப்பூசி மையம் விடுபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பக்கத்து வார்டுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாப்பநாயக்கன்புதூரில் மீண்டும் தடுப்பூசி மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பீளமேடு பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி அளித்த மனுவில், “மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களில் சமீபத்தில் பெய்த மழையால் செடி, கொடிகள் அதிகம் முளைத்துள்ளன. எனவே, பூங்காக்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.