

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டஅலுவலகத்தில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரபிரதேச சம்பவத்திற்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்டஅனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் பிரதமர் கண்டிக்காமல் இருப்பது, இதனை ஆதரித்து, ஊக்குவிப்பதை போல உள்ளது.
பாஜக அரசு நிறைவேற்றிய புதிய வேளாண்மை திருத்தச் சட்டங்கள், மின் திருத்த சட்டங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்காலத்தில் போராட்டங்கள் தீவிரமடையும். தீபாவளிநெருங்கும் நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.
சமையல் காஸ் விலையை குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாக ஒருவித மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு போதும் பாஜக காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது, மாநில குழு உறுப்பினர்கள் லகுமய்யா, சிவராஜ், மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மாதையன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.